இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி, தனது 106-வது வயதில் காலமானார்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் தற்போது 106-வது வயதில் இன்று காலமானார். தனது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கூட இமாச்சலப் பிரதேச தேர்தலில் வாக்களித்து இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு தான் தற்போது மறைந்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் கின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த இவர், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட ஷியாம் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளார். மக்களவை தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள ஷியாம் சரண் மொத்தம் 34 முறை வாக்களித்துள்ளார்.

இந்நிலையில், இமாச்சலப் பிரேதச மாநிலத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு தபால் வாக்கு செலுத்த விருப்பமா என கேட்டுள்ளனர். அதனை மறுத்துவிட்ட ஷியாம் சரண் நேகி, வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றே வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில், திடீரென அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2ஆம் தேதி, ஷியாம் சரண் நேகி முதல்முறையாக தனது வாக்கினை தபால் வாக்காக செலுத்தினார். இது அவர் வாக்களித்த 34வது பேரவைத் தேர்தல் வாக்காகும். அன்றைய தினம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோரி ட்ரம் இசை இசைக்க, மாநிலத்தின் தனித்துவமான தொப்பியை அணிந்து கொண்டு ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். இதையடுத்து அவரது விரலில் மை தடவப்பட்டது. வாக்களித்ததற்கான அந்த அடையாளத்தைக் காட்டியவாறு அவர் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார்.

அப்போது பேசிய ஷியாம் சரண் நேகி, “மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு நாடு சுதந்திரம் பெற்றது. இதன்மூலம் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். கோயில் திருவிழாக்களைப் போல் கருதி மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மிகவும் மதிப்பு மிக்கது. வாக்களிப்பதன் மூலம்தான் நல்லவர்களை நாம் தேர்வு செய்ய முடியும்” என தெரிவித்தார்.

கடந்த 2ஆம் தேதி வாக்களித்த அவர் நேற்று, வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடி, இமாச்சலப் பிரதேச முதல்வர் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரும் ஷியாம் சரண் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷியாம் சரண் நேகியின் இல்லத்துக்கு நேரில் சென்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரிடம் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.