இன்றைய டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பும் முக்கியமானது. பெரும்பாலான பணப்புழக்கங்களும், ஆவணப் பரிமாற்றங்களும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூழலில், இ-மெயில் சேவைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு சமீபத்தில் ஹேக்கிங் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்து ஜிமெயில் பயனர்களும் தங்களது கணக்குகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடவுச்சொற்களை (Passwords) பாதுகாப்பான மற்றும் வலுவான முறையில் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் சூழலில், செயற்கை நுண்ணறிவை (AI) ஆதாரமாகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். Indirect Prompt Injections எனப்படும் புதிய வகை சைபர் அச்சுறுத்தல் குறித்து கூகுள் கவலை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், தனிநபர்கள் மட்டுமல்லாது, நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களையும் ஒரே நேரத்தில் குறிவைத்து தாக்கக்கூடியவையாக இருப்பதால், இது ஒரு பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.
மேலும், கூகுளின் சில சேவைகள் மற்றும் தரவுத்தொகுப்புகள் (Databases) ஹேக்கிங் முயற்சிகளுக்குள்ளாகியுள்ளதற்கான தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, SalesForce தளத்தில் உள்ள தரவுகள் பாதிக்கப்பட்டதன் பின்னணியில், சுமார் 2.5 பில்லியன் ஜிமெயில் பயனர்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் குற்றவாளிகள் கூகுளின் அதிகாரப்பூர்வ ஊழியர்கள் போலவே நடித்து, பயனர்களிடம் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கின்றனர். எனவே, பயனர்கள் எந்த தகவலையும் பகிரும் முன் அதை சரிபார்க்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
கடவுச்சொற்கள் மட்டுமன்றி, புதிய பாதுகாப்பு முறையான பாஸ்கீக்களின் (Passkeys) பயன்பாட்டை. இது பயனர்களுக்கு கடவுச்சொல் இல்லாத பாதுகாப்பான உள்நுழைவு அனுபவத்தை வழங்குகிறது. பாஸ்கீக்கள், பயனரின் உள் சாதன பாதுகாப்பு (device-level security) மற்றும் பயோமெட்ரிக் பயன்படுத்துவதால், ஹேக்கிங் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைக்கப்படுகின்றன.
இவை தவிர, SMS அடிப்படையிலான two-factor authentication முறைகளைவிட, பாதுகாப்பான அத்தாட்சிப்படுத்தல் முறை பயன்படுத்தும் திட்டத்தையும் கூகுள் வலியுறுத்துகிறது. இதற்கான அமைப்புகளை அனைத்து பயனர்களும் தங்கள் கணக்குகளில் செயல்படுத்த வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரையாக உள்ளது.
தற்போது, ஜிமெயில் பயனர்களில் மிகச்சிலர் மட்டுமே (சுமார் 36%) தங்கள் கடவுச்சொற்களை நேர்மாறாக புதுப்பிக்கின்றனர். இது பெரும் பாதுகாப்பு குறைபாடாகக் கருதப்படுகிறது. ஒரே கடவுச்சொல்லை பல தளங்களில் பயன்படுத்தும் பழக்கமும், பாதுகாப்பை சீர்குலைக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகும். எனவே, ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியான, வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவது கட்டாயமாகும்.
பயனர்கள் தங்களது கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பதை அவ்வப்போது சரிபார்த்து, ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக பாதுகாப்பு அம்சங்களை புதுப்பிக்க வேண்டும். இன்று இணையத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட இணைய பாதுகாப்பு பழக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.