நைஜர் நாட்டின் தென்மேற்கு டோசோ பகுதியில் ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, நைஜர் நாட்டில் இந்திய தூதரகம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, டோசோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பயங்கரவாதிகள், கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு இந்தியரை கடத்தி சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த தொழிலாளர்களில் ஒருவர் ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் கர்மாலி (39) என்று மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொருவர் தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தியர், ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் சிங் என்று தெரிகிறது. வெளிநாடுகளில் மின் பரிமாற்ற திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான டிரான்ஸ்ரெய்ல் லைட்டிங் லிமிடெட்டில் கடந்த ஒரு வருடமாக டோசோவி பணிபுரிந்து வந்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல, கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தவிர, இந்த ஆண்டு மேலும் பலர் கடத்தப்பட்டுள்ளனர், இதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு உதவிப் பணியாளராக வசித்து வரும் ஒரு ஆஸ்திரியப் பெண், ஏப்ரல் மாதத்தில் ஒரு சுவிஸ் பெண் மற்றும் ஐந்து இந்தியத் தொழிலாளர்களும் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 2023 இல் இராணுவம் அரசாங்கத்தை கவிழ்த்ததிலிருந்து நைஜரில் பாதுகாப்பு நெருக்கடி மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய ஜிஹாதி கிளர்ச்சியை நைஜர் எதிர்த்துப் போராடி வருகிறது. முன்னதாக, ஜூன் மாதம் நாட்டின் மிக மோசமான மாதங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது. ஐ.எஸ். ஆதரவு பெற்ற போராளிகள் தில்லாபெரி மற்றும் டோசோ பகுதிகளில் ஒரு பெரிய தாக்குதலை நடத்தினர். இதில், 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். இது கிராமப்புறங்களில் மீண்டும் பெரும் அட்டூழியங்களுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் பலி!. பலர் மாயம்!. கனமழை, சூறைக்காற்றால் பெரும் சோகம்!