கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் நிவாஸ் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதி மக்கள் கேட் கீப்பர் அறைக்கும் நுழைந்து அவர் மீது தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார் மீட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் – மயிலாடுதுறை வழியே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக் குறித்து ரயில்வே துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே, உண்மையான விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
Read more: அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி.. பிடிகொடுக்காமல் இருக்கும் பாமக, தேமுதிக..!!