கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது.
பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ய வந்த உறவினர்கள், மயானத்தில் ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட புதை குழிகள் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் பீதியில் உறைந்து போனார்கள்.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது கூட இதுபோன்ற நிலை ஏற்படாத நிலையில், தற்போது ஒரே நேரத்தில் இத்தனை குழிகள் ஏன் தோண்டப்பட்டது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பியது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குழிகள் தோண்டுவதற்கு ஆட்கள் கிடைக்காததால், மயானத்தை பராமரிப்பவர் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்த குழியை தோண்டியது தெரியவந்தது.
இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், “மயானத்தில் தோண்டப்பட்ட குழிகள் உடனடியாக மூடப்பட்டுவிட்டன. இது தொடர்பாக மயானப் பொறுப்பாளர் பாபுவிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.