தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகை துளசி, திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்ட கலைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மீகப் பயணத்தை தொடரப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகை துளசியின் கலை வாழ்க்கை, நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், வெறும் 3 மாத குழந்தையாக இருந்தபோதே தொடங்கியது. குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்த அவர், ‘சீதாலட்சுமி’ மற்றும் ‘சங்கராபரணம்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை நந்தி விருதைப் பெற்றுள்ளார்.
90-களுக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய துளசி, தமிழில் ‘மகாநதி’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற படங்களில் பிரபலமானார். சமீப காலங்களில், ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டியநாடு’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் கடைசியாக வெளியான ‘ஆரோமலே’ போன்ற படங்களில் அழுத்தமான அம்மா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வலம் வந்த துளசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு, எனது ஷீரடி தரிசனத்தை தொடர்ந்து, சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அடுத்த கட்ட வாழ்க்கையை ஆன்மீகத்தில் அர்ப்பணிக்க எடுத்திருக்கும் இந்த முடிவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



