கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் தேவாரத் தலத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவேட்களம் ஆகும். இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், சாஸ்திர விதிகளின்படி மிக சரியாக அமைக்கப்பட்ட பல்லவ மன்னர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும்.
ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டது. பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக, அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற விரும்பினான்.
அப்போது சிவபெருமானிடம் இருந்து மட்டுமே அதைப் பெற முடியும் என்று கிருஷ்ணர் வழிகாட்டினார். சிவபெருமானும் அர்ஜுனனும் இங்குதான் சொற்போரும், கடும் போரும் நடத்தினர். அந்தப் போரில் அர்ஜுனன் வாளால் அடித்த தழும்பு, இன்றும் மூலவரான பாசுபதேஸ்வரர் மீது காணப்படுகிறது என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் அனைத்து வினைகளும் நீங்கி, இன்பம் பெருகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், இங்குள்ள முருகப்பெருமான் தனது 12 கைகளுடன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இதனால், திருமணம் ஆகாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்டால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதேபோல், பேசுவதில் குறைபாடு உள்ளவர்களும், தங்கள் குழந்தைகளுக்குப் பேச்சு வரவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்களுக்குக் கோயிலில் வழங்கப்படும் மண்ணுருண்டைப் பிரசாதத்தைச் சாப்பிட்டுச் சென்றால் விரைவில் பேச்சுத்திறன் மேம்படும் என்று கூறப்படுகிறது.
வேறெங்கும் காணப்படாத ஒரு தனித்துவமாக, சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்துள்ள அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்தக் கோயிலில் மற்ற நாட்களை விடச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின்போது அதிக அளவில் மக்கள் வந்து வழிபடுகின்றனர். கிரகண நேரத்தில் வந்து வழிபட்டால், தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீரும் என்றும், கிரகண தோஷங்கள் நீங்கிப் பல மாற்றங்களை உணர முடியும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த சக்தி வாய்ந்த கோயில், காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். வைகாசி விசாகம், ஆணி திருமஞ்சனம், மகா சிவராத்திரி போன்ற முக்கிய விசேஷ நாட்களில் இங்குப் பெருங்கூட்டம் கூடிச் சிவபெருமானை வழிபட்டு சிறப்பிக்கின்றனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பாசுபதேஸ்வரர் கோயிலுக்கு நீங்களும் சென்று வழிபட்டு வரலாம்.
Read More : வாஸ்துப்படி மொபைலில் கடவுள் புகைப்படத்தை வால்பேப்பராக வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..?