ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர்.
மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதும், டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததும் விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த விபத்தில், ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 81 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: தூள்..! இன்று காலை 9 முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…!