செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(20). இவர் அதே பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது ஆண் நண்பருடன் மதுமிதா தொடர்ந்து செல்போனில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண் நண்பரிடம் பேசக்கூடாது என சரண் சொல்லியும் மதுமிதா தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவியை கொலை செய்ய சரண் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மனைவி மதுமிதாவை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஆண் நண்பருடன் பேசக் கூடாது என சரண் மதுமிதாவிடம் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஆத்திரமடைந்த சரண் தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து சென்று தனது வீட்டிற்கு சென்று தாயாரிடம் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காதல் மனைவி ஆண் நண்பருடன் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



