பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் திரைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது கணவர் வேலாயுதத்தின் தொழில், அரசியல் செல்வாக்கு குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
”’கற்பகம்’ படத்தில் ஒரு லட்சியப் பெண்ணாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.ஆர்.விஜயா. ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குறும்புக்காரப் பெண்ணாகவும், ‘இரு மலர்கள்’ படத்தில் பத்மினியுடன் இணைந்து நடித்தும் தன் திறமையை வெளிப்படுத்தினார். உடல் எடை கூடிய பிறகும், நடிப்பில் தொடர்ந்து நிலைத்து நின்றார்.
எம்ஜிஆருடன் இணைந்து ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘நல்ல நேரம்’ போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், சிவாஜியுடன் நடித்தபோதுதான் அதிக புகழ் பெற்றார். குறிப்பாக, ‘தங்கப் பதக்கம்’ படத்தில் சிவாஜியையே நடிப்பில் விஞ்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் நீச்சல் உடையில் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகர் பாலாஜி தயாரித்த ‘அண்ணாவின் ஆசை’ படத்திற்கு நிதி உதவி செய்ய வந்த தொழிலதிபர் வேலாயுதத்துடன் கே.ஆர்.விஜயாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த வேலாயுதம், தனது இரண்டு மனைவிகளின் அனுமதியைப் பெற்று, கே.ஆர்.விஜயாவை 3-வது திருமணம் செய்துகொண்டார்.
வேலாயுதம், ‘ஜஸ்டிஸ் விஸ்வநாத்’, ‘பைலட் பிரேம்நாத்’ போன்ற பல படங்களைத் தயாரித்துள்ளார். கே.ஆர்.விஜயாவையே முழுமையாக நம்பியிருந்த அவரது தங்கைகளுக்கு வேலாயுதம்தான் திருமணம் செய்து வைத்தார். சுதர்சன் ஷிப்பிங் ஏஜென்சிஸ், மூன்று சொந்தக் கப்பல்கள், ஒரு சொந்த விமானம், சுதர்சன் சிட்பண்ட் மற்றும் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை என கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபராகவும், அப்போதைய இந்திரா காங்கிரசின் முக்கிய ஆதரவாளராகவும் வேலாயுதம் விளங்கினார்.
அரசியல் மாற்றத்தால், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, வேலாயுதத்தின் தொழில்கள் நெருக்கடியைச் சந்தித்தன. இதனால், அவர் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து, சினிமா தயாரிப்பையும் நிறுத்தினார். அரசியல் ரீதியான தொந்தரவுகளே அவரது வீழ்ச்சிக்குக் காரணம்” என டாக்டர் காந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.



