பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் அமைந்துள்ள சிவில் மருத்துவமனையின் ஐசியூ வார்டில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட ஆக்ஸிஜன் அழுத்த குறைபாடு காரணமாக மூன்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவமனை நிர்வாகத்திலும், மாநில சுகாதார துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இரவு 8 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில நிமிடங்களுக்கு ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்துள்ளது. மருத்துவமனையின் தரவுகளின்படி, மூன்று நோயாளிகளும் அதிக ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.
ஒருவர் நுரையீரல் கட்டி, இன்னொருவர் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், மூன்றாவது நபர் போதை சார்ந்த சிக்கலில் இருந்து சிகிச்சை பெற்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்ததால் மூன்று நோயாளிகளும் உயிரிழந்தனர்.
பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் நேரில் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது: “ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஒரு சிறிய தடை ஏற்பட்டது. ஆனால் அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. ஆக்ஸிஜன் அழுத்தம் குறைந்தது சுமார் 1-2 நிமிடங்களுக்கு மட்டுமே. மரணங்கள் ஒரே நேரத்தில் இல்லை; 10-15 நிமிட இடைவெளியில் நிகழ்ந்தவை.” என்றார்.
மேலும் சண்டிகரில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு அழைக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்துக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். சிவில் சர்ஜன் டாக்டர் வினய் குமார் கூறியதாவது: “ஆக்ஸிஜன் விநியோகத்தில் சிறிய தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டது. உடனடியாக காப்பு சிலிண்டர்கள் இயக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தவர்கள்” எனக் கூறினார்.
Read more: மனைவி பிரிந்த துக்கம்.. பீர் குடித்தே உயிரை விட்ட காதல் கணவன்..! என்ன நடந்தது..?