தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமைக்கு அதிரடியான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக போட்டியிட 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அவர் கறாராக வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு சந்திக்கவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், கட்சியின் இருப்பையும் பலத்தையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவத்தை பதிவு செய்வதற்கு மாநிலங்களவை சீட் மிக அவசியம் என்று அக்கட்சி தலைமை கருதுகிறது.
கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றால் மட்டுமே தொண்டர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்பதில் பிரேமலதா உறுதியாக உள்ளார். இந்த முன்நிபந்தனைகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் முறையான பேச்சுவார்த்தைகளே தொடங்காத நிலையில், இவ்வளவு பெரிய கோரிக்கையை தேமுதிக முன்வைத்துள்ளது கூட்டணி உறவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
அதிமுக தலைமை இந்த நிபந்தனைகளுக்கு உடன்படுமா அல்லது தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மல்லுக்கட்டுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 2026 தேர்தல் களத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடருமா அல்லது புதிய திருப்பங்கள் ஏற்படுமா என்பதை அரசியல் விமர்சகர்களும், மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
Read More : FLASH | அடங்காத இலங்கை கடற்படை..!! தமிழக மீனவர்கள் 8 பேர் அதிரடி கைது..!! மீண்டும் பதற்றம்..!!



