வியட்நாமில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்றது தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்நாம். இதிலும் குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் அந்த பகுதிக்கு சென்று இயற்கை அழகை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் தலைநகர் ஹனோயில் இருந்து 48 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வொண்டர் சீ படகு ஒன்று ஹா லாங் பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் 34 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 11 பேரைக் காப்பாற்றினர், மேலும் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
உயிர் பிழைத்தவர்களில் 14 வயது சிறுவனும் ஒருவன், கவிழ்ந்த படகின் உட்பகுதியில் சிக்கிய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான். பெரும்பாலான பயணிகள் நாட்டின் தலைநகரான ஹனோயிலிருந்து வந்த சுமார் 20 குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த வாரம் ஹா லாங் விரிகுடாவின் கடற்கரை உட்பட வியட்நாமின் வடக்குப் பகுதியை புயல் விபா தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: இடஒதுக்கீடு கோரி இன்று பாமக சார்பில் மாபெரும் போராட்டம்… தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு…!