மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பான்புரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது.
இந்த விழாவின் ஒரு பகுதியாகக் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் பங்கேற்ற சில மாணவிகள் உடை மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறைக்குச் சென்றபோது, 4 மாணவர்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவிகள் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த மாணவர்கள் ரகசியமாக அறையின் வெளியே நின்று தங்கள் மொபைல் போன் மூலம் உள்ளே நடப்பவற்றை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் இந்தச் செயல் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பதிவாகும் காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாணவன் மற்றொருவரின் தோளில் ஏறி நின்று வீடியோ எடுத்தது, சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் உடனடியாகப் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய உமேஷ் ஜோஷி, அஜய் கவுடு, மற்றும் ஹிமான்சு பைராகி ஆகிய 3 மாணவர்களைக் கைது செய்தனர். விசாரணையில், கைதானவர்கள் அனைவரும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்பதும், அதில் உமேஷ் ஜோஷி அந்த அமைப்பின் நகரச் செயலாளர் பதவியில் இருந்ததும் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏ.பி.வி.பி. அமைப்பின் நகரச் செயலாளர் பதவியில் இருந்த உமேஷ் ஜோஷி உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது கைதானவர்களின் மொபைல் போன்களைப் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : குழந்தைக்கு யார் அப்பா..? கணவனுக்கும் கள்ளக்காதலனுக்கும் நடந்த வார்..!! கருவில் இருந்த சிசு உள்பட 3 பேர் கொலை..!!



