இந்தியாவில் திருமணம் என்பது நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டாக இல்லாமல் ஒரு சமூக நிறுவனமாகக் கருதப்பட்டு வருகிறது.. ஆனால் நம் நாட்டில், திருமணத்தை மீறி உறவுகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் உருவாகி வளர்ந்து வருவது, உறவு, நட்பு மற்றும் உணர்ச்சி நிறைவு குறித்து மக்கள் பேசும் விதத்தில் அமைதியான மாற்றம் உருவாகி வருவதை காட்டுகிறது.
அத்தகைய தளங்களில் ஒன்றான க்ளீடன் (Gleeden) இந்தியாவில் 40 லட்சம் பயனர்களை கடந்துள்ளது. இது திருமணத்தை தாண்டிய உறவுகள் குறித்து பேசும் மனப்பாங்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது.
Gleeden 2009 ஆம் ஆண்டு France நாட்டில் தொடங்கப்பட்டது. திருமணத்திற்கு வெளியான உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் டேட்டிங் மற்றும் சமூக வலைத்தளம் இதுவாகும். “Glee” மற்றும் “Eden” என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பிலிருந்து இந்த பெயர் உருவாகியுள்ளது. இது பைபிளில் வரும் Eden தோட்டத்தை குறிக்கும்.
இந்த தளத்தின் பயனர்களில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஐரோப்பிய யூனியன் பகுதிகளில் உள்ளவர்கள். இருப்பினும், இந்தியா இந்த தளத்திற்கு மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
உறவுகள் குறித்த பார்வையில் மாற்றத்தை காட்டும் டிஜிட்டல் தளம்
இந்தியாவில் உறவுகள், நட்பு மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் குறித்து மக்கள் பேசும் விதம் மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், இந்த தளம் வேகமாக வளர்ந்து வருவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. அந்நிறுவனம் வழங்கிய தகவலின்படி, இந்தியாவில் உள்ள 40 லட்சம் பயனர்களில் 65% ஆண்களும் 35% பெண்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள் அல்லது நீண்டகால உறவில் இருப்பவர்கள்.
இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பெண்களின் பயன்பாடு 148% உயர்ந்துள்ளது. பெண்கள் தங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க அதிக சுதந்திரம் பெறத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தளத்தில் பெண்களுக்கு சேவையை இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்-பெண் சமநிலையை உருவாக்க முயற்சி செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ நகரங்கள் முன்னிலையில், சிறிய நகரங்களிலும் வளர்ச்சி
இந்த தளத்தின் பயனர்கள் பெரிய மெட்ரோ நகரங்களிலும், வளர்ந்து வரும் நகரங்களிலும் உள்ளனர். இந்திய நகரங்களில் பெங்களூரு 18% பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் 17%, டெல்லி 11%, மும்பை 9%, மற்றும் புனே 7% ஆகியவை உள்ளன.
ஆனால் இப்போது இந்த வளர்ச்சி மெட்ரோ நகரங்களில் மட்டும் இல்லை.. லக்னோ, நொய்டா, சண்டிகர், சூரத், கோவை, புவனேஸ்வர், பாட்னா, கவுஹாத்தி, ராய்பூர் போன்ற நகரங்களிலும் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் இரண்டாம் நிலை நகரங்களிலும் இத்தகைய டிஜிட்டல் தளங்கள் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன என்பது தெரிய வருகிறது.
இந்தியர்கள் இந்த தளத்தை எப்படி பயன்படுத்துகின்றனர்?
பயனர் பழக்க வழக்கங்களைப் பற்றிய தகவல்களும் சில விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. சராசரியாக இந்திய பயனர்கள் தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்த தளத்தில் உரையாடலில் செலவிடுகின்றனர். அதிக செயல்பாடு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை காணப்படுகிறது.
இந்த தளத்தில் உள்ள ஆண்கள் பொதுவாக 25 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்களைத் தேடுகின்றனர். அதே சமயம் பெண்கள் 30 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண்களை விரும்புகின்றனர். குறிப்பாக மருத்துவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் சார்ட்டர்டு கணக்காளர்கள் போன்ற தொழில்முனைவோர்களை பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘நவீன உறவுகளில் அமைதியான புரட்சி’
இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சமூக மாற்றங்களும் அதனுடன் இணைந்து நடைபெற்று வருகின்றன என்று நிறுவனம் கூறுகிறது.
க்ளீடன் இந்தியாவின் நாட்டு மேலாளர் சிபில் ஷிடெல் இதுகுறித்து பேசிய போது “ இந்தியாவில் 40 லட்சம் பயனர்களை கடந்தது எங்களுக்குப் பெரிய முக்கியமான தருணமாகும். இது டிஜிட்டல் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. அதே நேரத்தில், மக்கள் நவீன உறவுகளை அணுகும் விதத்தில் அமைதியான ஒரு பெரிய மாற்றம் உருவாகி வருகிறது,” என்று தெரிவித்தார்.



