ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரான்ஸ்–மொன்டானா (Crans-Montana) என்ற சொகுசு ஸ்கீ ரிசார்ட் நகரத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பார் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஸ்விஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான துல்லியமான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தாலி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்விஸ் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 40 பேர் உயிரிழந்திருக்கலாம், மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த நிலை
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அந்தப் பகுதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் அனைத்தும் விரைவில் நிரம்பி வழிந்ததாக, பிராந்திய கவுன்சிலர் மாதியாஸ் ரெனார்ட் தெரிவித்தார்.
விபத்துக்குப் பிறகு பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும் கூறப்படுகிறது.
உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
ஸ்கீயிங் சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தப் பகுதியில், மருத்துவ வளங்கள் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்தில் இருப்பதால், அடுத்த சில நாட்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கிரான்ஸ்–மொன்டானா பற்றி
கிரான்ஸ்–மொன்டானா நகரம், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலைக்கு 40 கி.மீ வடக்கில் சூரிச் நகரத்திற்கு 130 கி.மீ தெற்கில், சுமார் 10,000 பேர் வசிக்கும் பகுதி நகரத்தின் உயரமான பகுதி கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த நகராட்சி 2017 ஜனவரி 1 அன்று பல சிறிய நகரங்கள் ஒன்றிணைந்த பிறகே உருவானது. இது ரோன் பள்ளத்தாக்கிலிருந்து Plaine Morte பனிப்பாறை வரை 590 ஹெக்டேர் பரப்பளவில் பரவி உள்ளது.
சுற்றுலாவை மட்டும் சார்ந்திராமல், உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்பதே நகராட்சியின் நீண்டகால இலக்காகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்து, புத்தாண்டு கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக முடியும் என்ற எதிர்பார்ப்பை சோகமாக மாற்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அசுத்தமான நீரால் 7 பேர் பலி, 149 பேர் மருத்துவமனையில் அனுமதி; இந்தூரில் என்ன தான் நடக்கிறது?



