மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் நெருல் பகுதியில் சில தனியார் பார்கள் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆபாச நடனம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை இந்த பார்கள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வீடியோவில், தனியார் பாரில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவர்களிடம் பணத்தை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசு விதிகளின்படி, நடன பார்கள் இயங்க அனுமதி இருந்தாலும், அவை கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே இயங்க வேண்டும்.
குறிப்பாக ஆபாச நடனங்கள், நெறிமுறைக்கு மாறான நிகழ்ச்சிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் திறந்திருப்பது போன்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், சில இடங்களில் இந்த விதிகள் முற்றிலும் மீறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் யோகேஷ் கதம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், வஷி பகுதியில் நடைபெற்ற போலீஸ் சோதனையில், சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு நடன பாரில் ஆபாச நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது தெரியவந்தது.
அந்த இடத்தில் இருந்து 40 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் 46 பேருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டங்களை மீறி செயல்படும் இத்தகைய பார்கள் குறித்து பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மேலும், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆலை..!! ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?