இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் சிக்கல் கடந்த சில நாட்களாகவே விஸ்வரூபம் எடுத்துள்ளது. வியாழக்கிழமை அன்று மட்டும் சுமார் 550-க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் 95, மும்பையில் 85, ஹைதராபாத்தில் 70, மற்றும் பெங்களூரில் 50 என முக்கிய நகரங்களில் பெரிய அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கு முன்னதாக, புதன்கிழமை அன்று சுமார் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ‘சரியான நேரத்தில் விமானங்களை இயக்குவது’ என்ற பெருமைக்குரிய “IndiGo Standard Time” என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்துக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இண்டிகோ கூறும் காரணம் என்ன.?
தினமும் சுமார் 2,300 விமானங்கள் இயக்கும் இண்டிகோ, இந்த குளறுபடிகளுக்காக பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இதற்குப் பல காரணங்கள் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முக்கியமாக, விமானப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள கடுமையான புதிய பணி நேர வரம்பு விதிமுறைகள் இண்டிகோவின் ஊழியர் திட்டமிடலைச் சிதைத்துவிட்டன.
இதுமட்டுமல்லாமல், சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலத்தால் ஏற்பட்ட அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, மற்றும் விமான நிலையங்களில் அதிகரித்த நெரிசல் ஆகிய அனைத்துச் சவால்களும் ஒரே நேரத்தில் இணைந்ததால்தான் இந்த எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டதாக இண்டிகோவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எப்போது சீராகும்..?
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ-விடம் (DGCA), வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விமானச் செயல்பாடுகள் முழுமையாகச் சீராகி, நிலைப்படுத்தப்படும் என்று இண்டிகோ உறுதி அளித்துள்ளது. இருப்பினும், விமான அட்டவணையைச் சீராக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு விமான ரத்துகள் தொடரலாம் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. எனவே, இண்டிகோ விமானங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், புறப்படுவதற்கு முன் விமானத்தின் நிலையை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
Read More : குளிர்காலத்தில் முதியோர்களுக்கு ஆபத்து..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! முகவாதம் வரும் அபாயம்..!!



