ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணம் மர்ஜா மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட அந்த நபருக்கு சிறுமியை பெற்றோரே விற்ற நிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது..
இந்த நிலையில் குழந்தையை 9 வயதில் அவரின் கணவரின் வீட்டிற்கு அனுப்பலாம் என்று கூறி தாலிபான்கள் அறிவுறுத்தி உள்ளனர். உள்ளூர் தாலிபான் அதிகாரிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, ஆனால் இதுவரை சிறுமி அந்த நபரின் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
பெண்ணின் தந்தை மற்றும் மணமகன் மர்ஜா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர், இருப்பினும் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சிறுமி தற்போது தனது பெற்றோருடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளை பெற்றோர் விற்பது என்பது சாதாரண நடைமுறை தான்.. பெண்ணின் உடல் தோற்றம், கல்வி மற்றும் உணரப்பட்ட மதிப்பின் அடிப்படையில் மணமகள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையான கோபத்தை தூண்டியுள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணங்கள்
2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை மீண்டும் பெற்றதிலிருந்து, நாட்டில் குழந்தை மற்றும் இளவயது திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. வறுமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், குறிப்பாக பெண் கல்வி தடை உள்ளிட்ட பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது இல்லை.
தாலிபான்கள் பெண்களின் கல்வி மீதான தடை, நாடு முழுவதும் குழந்தை திருமணங்களில் 25% அதிகரிப்புக்கும், ஆரம்பகால குழந்தைப் பேற்றில் 45% அதிகரிப்புக்கும் பங்களித்துள்ளது என்று கடந்த ஆண்டு ஐ.நா. பெண்கள் அறிக்கையி கூறுகிறது..
எனினும் குழந்தை திருமணங்களில் சர்வதேச அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.. குழந்தை திருமணம் பெண்களின் உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.. இந்த குழுக்கள், இளவயது திருமணங்களில் ஈடுபடும் பெண்கள் அடிக்கடி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன, இதில் முன்கூட்டிய கர்ப்பங்கள் அதிகரித்த சுகாதார அபாயங்கள், வீட்டு வன்முறை மற்றும் சமூக தனிமைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.
இந்த நடைமுறைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் இளம் பெண்களைப் பாதுகாக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க உலகத் தலைவர்களை வலியுறுத்தி வருகின்றனர்..
Read More : இந்தியர்களுக்கு ரூ.23 லட்சத்திற்கு வாழ்நாள் கோல்டன் விசா ? உண்மை என்ன? UAE அரசு விளக்கம்..