நியூசிலாந்த் நாட்டை தாக்கிய ‘வையாணு’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வட தீவுப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தபோது, மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மிகக் குறுகிய நேரத்திலேயே சுமார் 10 செ.மீ அளவிற்கு கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மோசமாகியது. மஹுரங்கி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் வார்க்வோர்த் நகருக்குள் புகுந்து சாலைகள் மற்றும் வீடுகளை முழுவதும் நீரில் மூழ்கடித்தது. இந்தப் பேரழிவின் காரணமாக சுமார் 5,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.
உயிரிழப்பு: ‘வையாணு’ புயல் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 11 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் சவாலாக மாறியுள்ளன.
அவசர நிலை அறிவிப்பு: பெரும் பாதிப்புக்குள்ளான வக்காட்டேன் பகுதியில் மட்டும் சுமார் 270 வீடுகளைச் சேர்ந்த 2,500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வாங்காரே, பே ஆஃப் பிளென்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் அவசர நிலையை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு: நாட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான, சாலை போக்குவரத்து இரண்டுமே ஸ்தம்பித்துள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஏர் நியூசிலாந்த் நிறுவனம் தனது 90 விமான சேவைகளை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



