ஜார்கண்டில் கன்வர் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சிலிண்டர் லாரியுடன் மோதியதில் 18 பேர் பலி, பலர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் குறைந்தது கன்வர் யாத்திரைக்கு சென்ற 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். காடைந்தவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
இந்த விபத்தில் குறைந்தது 18 கன்வாரியாக்கள் உயிரிழந்ததாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ “எனது மக்களவைத் தொகுதியான தியோகரில், ஷ்ரவண மாதத்தில் கன்வார் யாத்திரையின் போது, பேருந்து மற்றும் லாரி விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை சிவபெருமான் வழங்கட்டும்” என்று கூறினார்.
விபத்து எப்படி நடந்தது?
அதிகாலை 4:30 மணியளவில் மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே இந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது..
இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தும்கா மண்டலம்) சைலேந்திர குமார் சின்ஹா இதுகுறித்து பேசிய போது, “தியோகரில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே கன்வர் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற 32 இருக்கைகள் கொண்ட பேருந்து, எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்” என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கன்வர் யாத்திரை என்றால் என்ன?
சிவபெருமானின் பக்தர்கள் காவி உடை அணிந்து, கங்கை நீரைக் கொண்டு சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் ஒரு புனித யாத்திரை தான் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சாவன் மாதத்தில் இந்த யாத்திரை நடைபெறும்..
ஹரித்வார், கௌமுக், ரிஷிகேஷ் போன்ற புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரைக் கொண்டு வருவார்கள். இந்த யாத்திரையை இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அனல் பறக்கும் விவாதம்!. ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!.