சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனாட்சி (28). இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது காதலனால் ஏமாற்றப்பட்டு, அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றதால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சி தனது சகோதரி வசிக்கும் சிவகங்கை மாவட்டம் வெற்றியூருக்குச் சென்றபோது, அங்கே பக்கத்து வீட்டில் வசித்து வந்த சத்தியா என்கிற பெரியசாமி என்பவரின் மகன் மணிமாறனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது.
அதன் பிறகு, பெரியசாமி அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைக்குச் சேர்ந்தார். இதனால், மீனாட்சியும் பெரியசாமியும் சென்னை அம்பத்தூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து, சுமார் 5 ஆண்டுகள் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பிறகு, பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பெரியசாமி, மீனாட்சியிடம், “நான் ஊருக்குச் சென்று பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் சென்னைக்குத் திரும்பவே இல்லை.
பெரியசாமிக்குப் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி, உடனடியாக விராலிமலைக்குச் சென்று, பெண் வீட்டாரிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
திருமணத்தை நிறுத்திய பிறகு, பெரியசாமியின் குடும்பத்தினர் சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதாக மீனாட்சியிடம் உறுதியளித்தனர். ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மீனாட்சி, அதிக அளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீனாட்சி உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து, தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்தவை குறித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரியசாமியிடம் விசாரணை நடத்தியதில், அவர் மீனாட்சியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தனது பெற்றோர்தான் மிரட்டுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெரியசாமியின் பெற்றோரையும் வரவழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது காதலியையும், காதலனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Read More : எடப்பாடிக்கு குஷியோ குஷி..!! மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!! கதிகலங்கும் ஓபிஎஸ், டிடிவி..!!



