அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.
டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை :
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக கடுமையான அபராதங்களை விதிக்கும் மசோதாவை குடியரசுக் கட்சியினர் கொண்டு வருகின்றனர். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்படும்” என்று வெளிப்படையாக எச்சரித்தார்.
இந்தியாவுக்கு ஆபத்தா..?
இந்தப் புதிய மசோதா நிறைவேறினால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இருந்து வரும் இறக்குமதிப் பொருட்களின் மீது 500 சதவீதம் வரை கூடுதல் வரி (Tariffs) விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் கிடைக்கும். ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே இதனால் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, எரிசக்தி ஆராய்ச்சிக் குழுவின் (CREA) தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் €3.1 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக, இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.



