சிறுவயதிலிருந்தே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த 28 வயதான செர்ரி என்ற பெண், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மேற்கொண்ட முயற்சியில் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார்.
சிறு வயதிலேயே எடையைக் குறைக்க அவர் எடுத்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதன் பிறகு, அவர் பல்வேறு எடை குறைப்பு முறைகளை முயற்சித்தார். ஜிம் பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை எனப் பல முயற்சிகளை எடுத்தாலும், சீரான தன்மை இல்லாததால் மீண்டும் எடை கூடினார். 2018ஆம் ஆண்டில் 25 கிலோ எடை குறைத்தபோதும், தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினார்.
கடந்த 2022ஆல் 120 கிலோ எடையுடன் இருந்த செர்ரி, இந்த முறை நம்பிக்கையை இழக்காமல், ஒரு புதிய பயணத்தை தொடங்க முடிவு செய்தார். இந்த முறை, மற்றவர்களுக்காக இல்லாமல், தனது வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதே அவரது இலக்காக இருந்தது. இதற்கு முன்பு தோல்வியுற்ற அனுபவங்கள், அவருக்குச் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவியது.
சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி :
செர்ரி தனது உணவுப் பழக்கத்தை முழுமையாக மாற்றியமைத்தார். முன்பு, அவரது உணவில் 70% கார்போஹைட்ரேட்டுகளாக இருந்தன. ஆனால், நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், அவர் தனது உணவில் புரதத்தை (60%) அதிகரித்துக் கொண்டார். கார்போஹைட்ரேட்டுகளை (10%) குறைத்து, நார்ச்சத்தை (30%) சேர்த்துக் கொண்டார்.
உடல்நலக் குறைபாடுகள் காரணமாக ஆரம்பத்தில் உணவில் மட்டும் கவனம் செலுத்திய செர்ரி, எடை குறைய தொடங்கியதும், தசைகளை வலிமைப்படுத்த பயிற்சிகளை மேற்கொண்டார். அதோடு, தினமும் குறைந்தது 10,000 அடிகள் நடப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார்.
செர்ரியின் அறிவுரை :
எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு செர்ரி ஒரு முக்கிய அறிவுரை வழங்குகிறார். “யாரையும் நம்பாதீர்கள். அனைவருக்கும் பலனளிக்கும் ஒரே முறை என்று எதுவும் இல்லை. உங்களுக்குப் பொருந்தாத இலக்குகளை நிர்ணயிக்காதீர்கள். அப்படிச் செய்தால், அந்த முயற்சியே உங்களுக்கு சுமையாகிவிடும்” என்று அவர் கூறுகிறார்.



