தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “2023 ஆம் ஆண்டு தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அமைப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதே என் முதல் இலக்காக இருந்தது, அதை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்
ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு தன்னுடைய தரமான உள் கட்டமைப்பு, திறமையான மனிதவள வளம் மற்றும் நிர்வாக திறமையால் உலகின் முன்னணி நிறுவனங்களை ஈர்க்கும் நிலைக்குவந்துள்ளது. ‘பிராண்ட் தமிழ்நாடு’ உலகளவில் ஒலிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சார்ந்த மின்னணு உதிரிப்பாக நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை தமிழ்நாட்டில் தொடங்க அதிக அளவில் விருப்பம் தெரிவித்துள்ளது. ரூபாய் 30,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆப்பிளின் பிரதான ஐபோன் சப்ளையரான ஃபாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிறுவி இருக்கிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் போன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது, ஜபில் நிறுவனம் திருச்சியில் ஆலை அமைக்க இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு இந்தியாவின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மையமாகவும் முக்கியமான விநியோகச் சங்கிலியாகவும் மாறி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
2025 ஆம் நிதியாண்டை பொருத்தவரை தமிழ்நாட்டிலிருந்து 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 41.2% ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .
Read more: கடந்த வாரம் ரூ.3000 வரை சரிந்த தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..