தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி இன்று (மே 27) முதல் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்புகளை டிஎன்பிஸ்சி வெளியிட்டு நிரப்பி வருகிறது. இந்நிலையில் தான், Interview இல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, 615 பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அந்த வகையில் உதவி பொறியாளர் (சிவில்), வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், இளநிலை மின்ஆய்வாளர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், சமூக அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். இப்பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://tnpsc.gov.in/Document/english/CTS%20-Non%20Interview%20English_.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.