இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த முறையில் மேற்கொள்ள முயற்சிப்போம்,” என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
மேற்கு ஜாவா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு கனமழை உட்பட கடுமையான வானிலை நிலவும் என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது,,
இந்தோனேசிய செய்தி நிறுவனமான கோம்பாஸ், மேற்கு பண்டுங்கில் உள்ள பாசிர்லாங்கு கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரம் சுமார் 2 மணியளவில் (வெள்ளிக்கிழமை 19:00 GMT) நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
புராங்ராங் மலையின் சரிவுகளிலிருந்து வந்த நீர் மற்றும் மண் கலந்த வெள்ளம், கிராமத்தில் உள்ள சுமார் 30 வீடுகளைத் தாக்கியதாகவும், அப்போது பெரும்பாலான குடியிருப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலச்சரிவுடன் திடீர் வெள்ளமும் ஏற்பட்டதாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஏ.ஒய். யோகஸ்வரா தெரிவித்தார். “சம்பவம் நடந்தபோது, குடியிருப்பாளர்கள் ஒரு பெரிய இரைச்சல் சத்தத்தைக் கேட்டனர்,” என்று யோகஸ்வரா கூறினார்.
இந்தோனேசியாவின் ஆயுதப் படைகள், பிராந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூகம் அனைவரும் அவசரகால மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஒரு சோகம் நிகழும் என்ற அச்சத்தில், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களை வெளியேறுமாறு உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சனிக்கிழமை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 30 ஹெக்டேர் (74 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டது என்று அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..



