தெருநாய்களுக்கு 70% கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும்!. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு!. மத்திய அரசு அதிரடி!.

Stray Dogs Case 70 sterilized and vaccinated 11zon

நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது.


தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை எட்டு வாரத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும், தெரு நாய்களை பிடிக்கும்போது அதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து இந்த உத்தரவில் மாற்றங்களை செய்யக் கோரியும், மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களை பிடிக்க தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதி அமர்வு முன், இந்த மனுக்கள் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘நாடு முழுதும் நாள்தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குழந்தைகள், முதியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்’ என, புள்ளிவிபரங்களுடன் வாதிட்டார்.

நாய் ஆர்வலர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘தெருநாய்களை ஒன்றாக காப்பகங்களில் அடைப்பது அவற்றை கொலை செய்வதற்கு ஈடானது. ஏனெனில் அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இறந்து போகும். எனவே, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, வெறி ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்துவது போன்ற மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். ஈவு, இரக்கமின்றி தெருநாய்கள் விவகாரத்தை அணுகக்கூடாது’ என, கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் குறித்துக் கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆக., 11ம் தேதி வழங்கிய உத்தரவில் சில மாற்றங்களை பிறப்பித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதில், டில்லியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க தடை விதிக்க முடியாது. மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும். எங்கே பிடிக்கப்படுகிறதோ, மீண்டும் அங்கேயே நாய்களை விட்டு வர வேண்டும். அதே சமயம் இந்த உத்தரவு ரேபிஸ் நோயால் பாதித்த வெறிநாய்கள் மற்றும் மூர்க்கத்தனமான நாய்களுக்கு பொருந்தாது. அவற்றை பிடித்து வந்து காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். அதே போல் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை தொடர்ந்து தெருநாய்களுக்கு 70% கருத்தடை மற்றும் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பாக, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முறையான கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குப் பிறகு, நாய்களை அவற்றின் அசல் இடத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய ஒவ்வொரு மாநிலமும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணங்கத் தவறினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது.

மேலும், கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு நாய்க்கு ரூ.800 மற்றும் பூனைக்கு ரூ.600 மானியம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கூடுதலாக, அனைத்து பெரிய நகரங்களிலும் உணவளிக்கும் மண்டலங்கள், ரேபிஸ் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கு தனி நிதி ஒதுக்கப்படும். சிறிய தங்குமிடங்களுக்கு அரசாங்கம் ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கும், பெரிய தங்குமிடங்களுக்கு ரூ.27 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும். கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மத்திய அரசு ரூ.2 கோடியை ஒருமுறை மானியமாக வழங்கும்.

தடையற்ற கருத்தடை மற்றும் தடுப்பூசி முயற்சிகளை உறுதி செய்வதற்காக முக்கிய நகரங்களில் உணவளிக்கும் மண்டலங்கள், 24 மணி நேர உதவி மையங்கள் மற்றும் ரேபிஸ் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுவதை இந்த உத்தரவு வலியுறுத்துகிறது. இந்த முயற்சி தெரு விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதையும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Readmore: வரைவு வாக்காளர் பட்டியல்… ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை..! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!

KOKILA

Next Post

வங்கிகளில் லோன் வாங்குவோருக்கு செம குட் நியூஸ்..!! இனி சிபில் ஸ்கோர் கிடையாது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Mon Aug 25 , 2025
முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், சிபில் மதிப்பெண் (CIBIL Score) இல்லாததால் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “முன்னர் எந்த வகையான கடனும் எடுத்திருக்காத, க்ரெடிட் வரலாறு இல்லாத நபர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் […]
CIBIL 2025

You May Like