அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். மற்ற 796 குழந்தைகள் செப்டிக் டேங்கில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது நவீன அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக இருக்கும் தி ஹோம் என்றும் அழைக்கப்படும் பான் செகோர்ஸ் மதர் அண்ட் பேபி ஹோம் 1971 இல் இடிக்கப்பட்டது.
திருமணமாகாத கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக பான் செகோர்ஸ் இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த இல்லம் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் குழுவால் நடத்தப்பட்டது, அவர்கள் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இருவரையும் கவனித்துக் கொண்டனர். குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்கள் தங்கள் தாயிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது குடும்பத்தினரின் சம்மதமின்றி கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருப்பினும், தாய்மார்கள் ஒரு வருடம் அங்கேயே தங்கி சம்பளம் இல்லாத வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பான் செக்கர்ஸ் (Bon Secours) மடத்தில், பிறந்த உடனே குழந்தைகளை இழந்த பெண்கள் அல்லது மீண்டும் கர்ப்பமாகிவிட்ட பெண்கள், பெரும்பாலும் மக்தலேனா (Magdalene Laundries) நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். மக்தலேனா லாண்ட்ரிஸ் என்பது அயர்லாந்தில் கடந்த நூற்றாண்டில் இயங்கி வந்த மதநிலையங்களும், தொழில்துறைகளும் கொண்ட இடமாகும். இங்கே பெண்கள் பலர் தண்டனைமுறையில் வைக்கப்பட்டனர், சிறைச்சாலையைப் போல அல்லாமல், ஆனால் அதே அளவுக்கு தடுப்புப் புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தலுடன் கூடிய அமைப்புகள் ஆகும்.
இந்த நிறுவனத்தில் பாலியல் செயல்களில் ஏமாற்றப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள், கற்பழிப்பு அல்லது தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள், அனாதையான பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் ஆகியோரை அனுப்பப்பட்டனர். பான் செக்கர்ஸ் (Bon Secours) மடத்தில் நடந்த குழந்தைகளின் மர்ம மரணங்கள் மற்றும் அடக்கம் பற்றிய சம்பவம், 2014ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் கத்தரின் கோர்லெஸ் (Ms. Catherine Corless) செய்த கண்டுபிடிப்புகளின் பின்னர் உலகத்திற்கு அம்பலமானது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் ஐரிஷ் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அந்த இடத்தை தோண்டி குழந்தைகளின் எச்சங்களைத் தேட அனுமதிக்கும் ஒரு புதிய சட்டத்தை இயற்றிய பின்னரே அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்க முடியும்.
798 பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் அன்னெட் மெக்கே, CNN-க்கு அளித்த நேர்காணலில், தனது மகனைப் பார்த்தவுடன் தாயார் மாகி ஓ’கானர் (Maggie O’Connor) அழுத தருணத்தைப் பகிர்ந்துள்ளார். “என் புதிதாக பிறந்த மகனைக் கண்டவுடன் என் அம்மா அழத் தொடங்கினார். ஆரம்பத்தில், அது மகிழ்ச்சியின் கண்ணீராக நினைத்தேன். ஆனால் உண்மையில், அது வேறுவிதமான வேதனையின் வெளிப்பாடு என்று பின்னர் புரிந்தது.”
“அந்தக் குழந்தைதான்… அந்தக் குழந்தைதான்…” எனக் கதறி அழுத அனெட் மெக்கேவின் தாய் மாகி ஓ’கானர், தாம் 1943ஆம் ஆண்டு முதல் மூச்சுக்காற்றாகவும், சுமையாகவும் சுமந்து வந்த ஒரு மறைக்கப்பட்ட உண்மையை அந்த தருணத்தில் வெளியிட்டார். காதலால் கர்ப்பம் அடைந்த இளமைப் பெண்ணாக இருந்த மாகி, Tuam Mother and Baby Homeல் விடப்பட்டதாகவும், “இது பாவத்தின் பிள்ளை (child of sin)”, “அவள் இறந்துவிட்டாள்” என்று எந்த விளக்கமும் இல்லாமல், இறுதிச் சடங்கும் இல்லாமல் கன்னியாஸ்திரிகள் அடக்கம் செய்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சமீப வாரங்களில், டுவாம் (Tuam) பகுதியில் உள்ள பழமையான அந்த ஹோமில் , தடயவியல் நிபுணர்கள் அதிகாரப்பூர்வமாக தோண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முறையான அழுத்தம் தான். அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முடிந்த இடங்களில் எச்சங்களை அடையாளம் கண்டு முழு மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பங்கள் கோருகின்றன.
அதாவது, “இந்த குழந்தைகள் குப்பையாய் தள்ளப்படவில்லை, அவர்கள் தக்க மரியாதையுடன் புதைக்கப்பட வேண்டும்.” இவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். “நான் வளர்ந்தபோது, என் சகோதரி மேரி மார்கரட் (Mary Margaret) அயர்லாந்து நாட்டுப் பகுதியிலுள்ள ஒரு சிறிய கல்லறையில் அமைதியாக தூங்கியிருப்பார் என நினைத்தேன்,” என்று அனெட் மெக்கே (McKay) கூறினார். “ஆனால் உண்மை அதைவிட மோசமானது அவளை குப்பையாக எறித்துவிட்டனர். அவள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை நான் காணும்வரை ஓய மாட்டேன், என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஐரிஷ் அரசாங்க விசாரணையின்படி, துவாம் போன்ற நிறுவனங்களில், திருமணமாகாத பெண்கள் இரகசியமாக பிரசவம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு தத்தெடுப்புக்காக வைக்கப்பட்டனர், சிலர் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா வரை அனுப்பப்பட்டனர். இறந்தவர்களுக்கு, முறையான பதிவுகள் செய்யப்படவில்லை அல்லது இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.