இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யு-19 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை படைத்துள்ளார். 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்டுள்ளன. இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மழையின் காரணமாக இந்தப் போட்டி 40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக தாமஸ் ரெவ் 76 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 34.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்ததன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் தொடரில் இந்தியா 2–1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் திருப்புமுனையாக விளங்கிய வீரர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 31 பந்துகளில் அவர் 86 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம், யு-19 இந்திய அணிக்காக ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மந்தீப் சிங் 8 சிக்ஸர்களுடன் முன்னிலையில் இருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபித்த சூர்யவன்ஷி, இப்போது இந்திய யு-19 அணிக்காகவும் அசத்தலான ஆட்டத்தைக் காட்டி வருகிறார். அவரது அதிரடி பேட்டிங் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீரருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.