அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களில் சில இடங்களில் பண்டிகை 3 நாட்கள் வரை நீடிக்கிறது. விடுமுறை தினமான சனி, ஞாயிறுடன் திங்கள் கிழமையையும் சேர்த்து பெரும்பாலானோர் 3 நாட்கள் விடுமுறைக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு மக்கள் தொடர்பு நிறுவனம், தனது ஊழியர்கள் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிடவும், மனமகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடவும் வசதியாக, 9 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ரஜத் குரோவர், நிறுவனத்தின் ஊழியர்கள் முதல் இன்டர்ன்ஷிப் செய்பவர்கள் வரை அனைவருக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.
அதில், “டயட் திட்டங்களை தற்காலிகமாக மறந்துவிட்டு, உறவினர்கள் சூழ, எங்கும் பட்டாசு சத்தம் கேட்கும் காலம் வந்துவிட்டது. எனவே, உங்களுக்கு அக்டோபர் 18 முதல் அக்டோபர் 26 வரை, அதாவது 9 முழு நாட்கள் விடுமுறை அளிக்கிறோம். ஆம், நீங்கள் படித்தது சரிதான்! இந்த போனஸ் விடுமுறை நேரத்தில் நீங்கள் மதியம் வரை நிம்மதியாகத் தூங்கலாம், குடும்பத்துடன் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்க்கலாம், அதிகம் ‘காஜூ கத்திலி’ சாப்பிடலாம், இ-மெயில்களை பார்க்காமல் அலைபேசியை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்து வைக்கலாம்” என்று குரோவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுமுறை முடிந்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பும்போது, “2 கிலோ எடை அதிகரித்து, பத்து மடங்கு சந்தோஷத்துடனும், எதிர்கால பணிக்குத் தயாரான முழு ரீசார்ஜ் செய்யப்பட்ட நபராக திரும்ப வேண்டும். சிரித்த முகத்துடன் பொறுப்புடன் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் பலரும், ஊழியர்களை மதிக்கும் ரஜத் குரோவரின் இந்தச் செயலைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.