தெலங்கானா மாநிலம் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தில் ஜாதி ஆணவத்தின் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியநாராயணா என்பவரின் 2-வது மகன் சேகர். இவர், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) என்ற இளம் பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தை சத்தியநாராயணா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால், சேகர் மற்றும் ஸ்ரவாணி தம்பதியினர் ஸ்ரவாணியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இரு குடும்பத்திற்கும் இடையே அப்போதிருந்தே மோதல் நிலவி வந்தது. இந்த தம்பதியினர் தங்கள் திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் தீபாவளியை (தலைதீபாவளி) கொண்டாட இருந்த நிலையில், சேகரும் ஸ்ரவாணியின் பெற்றோரும் விறகு சேகரிப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரவாணியை குறிவைத்து, மாமனார் சத்தியநாராயணா, தனது மூத்த மகன் குமார் மற்றும் மருமகள் கவிதாவுடன் சேர்ந்து ஆக்ரோஷமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த 9 மாத கர்ப்பிணியான ஸ்ரவாணியை, அவர்கள் கண்மூடித்தனமாகக் கோடாரி மற்றும் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஸ்ரவாணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரவாணியின் தந்தை சென்னைய்யா அளித்த புகாரின் அடிப்படையில், மாமனார் சத்தியநாராயணா, மூத்த மகன் குமார் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கொழுந்தனாரின் ஆணுறுப்பை அறுத்து தூக்கி வீசிய அண்ணி..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் காரணம்..!!



