ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4ஆம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 1 மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் பெயர் அமய்ரா என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காட்சிகளில், சிறுமி பள்ளி கட்டிடத்தின் தடுப்புச் சுவரில் ஏறி சில நொடிகள் அமர்ந்தபின், சுமார் 47 அடி உயரத்தில் இருந்து கீழே குதிப்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரது உள் உறுப்புகள் கடுமையாக சேதமடைந்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகளை பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கூடவே பழகிட்டு என் பொண்டாட்டி கூட எப்படி..? ஃபுல் போதையில் இளைஞரை வெட்டி சாய்த்த கள்ளக்காதலியின் கணவன்..!!



