ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளதாவது, வரிவிதிப்பு தொடர்பாக இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், ஜப்பானும் தென்கொரியாவும் எதிர்வினையாக இறக்குமதி வரிகளை (import taxes) அதிகரிக்க முயன்றால், அதற்குப் பதிலாக அமெரிக்கா இன்னும் கடுமையான சுங்கவரிகளை விதிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, அவர்கள் இந்த புதிய வர்த்தக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலடி எடுத்தால், அமெரிக்கா அவர்கள் நாட்டின் முக்கியமான மோட்டார் வாகன (auto) மற்றும் மின்னணு (electronics) துறைகளுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
12 நாடுகளுக்கு கடிதம்: இதற்கிடையில், இதேபோன்ற வர்த்தக கடிதங்கள் மேலும் 12 நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று வெள்ளை மாளிகை மேலும் கூறியது. இரு நாடுகளும் தங்கள் தற்போதைய வர்த்தகக் கொள்கைகளைத் திருத்த ஒப்புக்கொண்டால், ஜப்பானிய மற்றும் தென் கொரியப் பொருட்கள் மீதான புதிதாக அறிவிக்கப்பட்ட 25% வரிகளில் குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வர்த்தக பதற்றம் (global trade tensions) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெரிக்காவின் இந்த திடீர் சுங்கவரி நடவடிக்கைகள் பல நாடுகளிடையே பொதுவான கவலையை (growing concern) ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா தன்னுடைய நிலைப்பாட்டில் சிறிதளவு தளர்வை காட்டும் சைகை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டிம்பின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, அமெரிக்கா வர்த்தக விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்தும்போது “எளிதில் சமரசம் செய்ய மாட்டேன்” என்று அறிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த இடை நிறுத்த காலம் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதுவரை, ஐக்கிய இராச்சியம் மற்றும் வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து, சில தயாரிப்புகளில் கணிசமாக அதிக வரிகளைக் குறைக்க சீனாவுடன் தற்காலிக ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம், அமெரிக்கா மிதமான முன்னேற்றம் மட்டுமே அடையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.