சாதி, மதத்தால் நம்மை பிரிக்கும் சக்திகளை பின்னுக்கு தள்ளி ஒன்றிணைந்து முன்னேற பாடுபடுவோம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவது என்ற குறிக்கோளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது திமுக அரசு. இது நம்முடைய அரசு என்று தான் சொல்லி வருகிறேன். திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறோம்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழர்களுக்கு பெருமை இருப்பது சான்றுகளால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். வெளிநாடு வாழ் வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளேன். தமிழகத்தை பிளவுப்படுத்தும் சாதி, மத சக்திகளை புறந்தள்ள வேண்டும். இறை நம்பிக்கை அவரவர் உரிமை. அதில் தலையிட மாட்டோம். திராவிடம் என்ற சொல்லை திட்டமிட்டுத்தான் குறிப்பிட்டு வருகிறேன்.
திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள் பலர் உள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றனர். தமிழால் இணைவோம் என்ற நோக்கில் நம்மை பிளவுப்படுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ளி நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். சாதியையும், மதத்தையும் தாண்டி செயல்படுவோம். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.