கேரள அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் சஜி செரியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம். ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் சாசனம் என குறிப்பிட்டார். இவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என கூறிய நிலையில், சஜி செரியன் திடீரென ராஜினாமா செய்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முடிவின் காரணமாக பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் இந்திய அரசியல் சாசனத்திற்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். தான் பேசிய ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், இது சிபிஎம் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளார்.