அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை தானாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாநிலம் மாவட்ட, சட்டமன்றத் தொகுதிகள் அளவில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக நிகழ்ச்சிகளைத் தொடங்க இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்கள் பிரதிநிதித்துவை சட்டத்தில் 23ஆம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 6 பி விண்ணப்பத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளை வாக்களார் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அடையாளம் காண்பதுதான் இதன் நோக்கமாகும். வாக்காளர்கள் தானாக முன்வந்து ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் ஆதார் எண்ணை இணைக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அறிவுறுத்தியுள்ளார். இதற்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.