திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை மருத்துவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ரயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா. கர்ப்பிணியான இவர், தனக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சைப் பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன், சவுந்தர்யாவை பரிசோதித்து விட்டு அவசர நோயாளி பிரிவுக்கு சென்று அங்குள்ள படுக்கையில் இருக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற சவுந்தர்யாவுக்கு அங்கிருந்த படுக்கை உயரமாக இருந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மர இருக்கையில் அமர முயன்றுள்ளார். இதனைக் கண்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருக்கையை எட்டி உதைத்துள்ளார். அதுமட்டுமின்றி சவுந்தர்யாவின் பெற்றோரை அவதூறாக பேசியுள்ளார். மேலும், சிகிச்சையளிக்கவும் மறுத்து அங்கிருந்து பாலகிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக பொதுமக்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், மருத்துவர் பாலகிருஷ்ணன் மீது விசாரணை தொடங்கியுள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில், அங்குள்ள மருத்துவர்கள் அவதூறாக பேசுவதும் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் திருப்புவனம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.