ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் திருட்டில் ஈடுபட்ட நபரை விசித்திரமான முறையில் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் புஜியான் மகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், விலை மதிப்புமிக்க சில பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதோடு வீட்டு பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசாரும் பால்கனி வழியே வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் திருடுபோனது தெரியவந்தது. மேலும், வீட்டு சமையலறையில் நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருந்தது. அதாவது திருட வந்த நபர் கைவரிசை காட்டிவிட்டு நூடுல்ஸ் மற்றும் முட்டை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
மேலும், இரவை அந்த வீட்டில் கழித்த திருடன் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி சுருள் பயன்படுத்திய அடையாளங்களும் இருந்தன. மேலும், சுவற்றில் கொசுவின் ரத்தக்கறை படிந்து இருந்தது. அதன் அருகே 2 கொசுக்களும் இறந்து கிடந்தன. திருடிய களைப்பில் கண்அயர்ந்த திருடனை கொசுக்கள் கடித்ததால், அதனை அவர் அடித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் திருடனின் ரத்தம் கொசுவின் உடலில் இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதையடுத்து, கொசு நசுக்கப்பட்டு இருந்த சுவற்றில் படிந்திருந்த ரத்தக்கறையை தடயமாக கொண்டு திருடனை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, சுவற்றில் இருந்த ரத்த மாதிரியை சேகரித்து போலீசார் டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பினர். இந்த ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அந்த பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது குற்ற பின்னணி கொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் ரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தி போனது. இதையடுத்து, சாய் தான் வீட்டில் நுழைந்து திருடியதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மூன்று இடங்களில் திருட்டில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.