ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்துக் கடந்த 23ஆம் தேதி எடப்பாடி ஆதரவாளரும் அதிமுக எம்.பியுமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரைப் பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், (CSR) புகார் பெறப்பட்டதாக ரசீது வழங்கினர்.

இந்நிலையில், சி.வி.சண்முகம் அளித்த புகார் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராயப்பேட்டை போலீசார் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனோடு இந்த வழக்கைச் சேர்க்கலாமா? அல்லது வேறு வழக்குப் பதிவு செய்யலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக ராயப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.