காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (19). இவரும் புழல் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர், மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து கொண்டனர்.
இதனால், மதன்தான் தமிழ்ச்செல்வியை கொலை செய்திருப்பார் என தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். பின்னர் கோனே அருவிக்கு சென்ற போலீசார் அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மதனும் தமிழ்செல்வியும் வனத்துக்குள் செல்வது தெரியவந்தது. அதேநேரம் மதன் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகியிருந்தது. பின்னர் மதனை பிடித்து விசாரித்தபோது, அருவயில் வைத்து தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் தப்பிவந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தமிழ்செல்வியின் சடலத்தை கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்த கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து மதனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.