டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, இந்திய அணி முதலில் களம் இறங்கியது. களமிறங்கிய உடனே கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 3வது ஓவரில் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்க, அடுத்து ஸ்ரேயஸ் ஐயரும் நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி ஆரம்பத்திலேயே தள்ளாடியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடினாலும், அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் ஜடேஜா 27 ரன்களில் வெளியேறினார்.
இவ்வாறாக இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஓபெட் மெக்காய் 4 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை சுருட்டினார். வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் பிரான்டன் கிங் 68 ரன்களும், டேவன் தாமஸ் 31 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 6 விக்கெட்டுகளை சுருட்டிய ஓபெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3வது டி20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.