வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 69 அடிக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு நேற்று முன்தினம் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்றும் நீர்வரத்து அதிகரித்ததால், கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தற்போது அணைக்கு 2,634 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்த பின்னர் உபரி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.