எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எலக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கி சுமூகமான மாற்றத்தை உறுதிசெய்ய பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கடந்த மாதம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டின் தலைநகர் மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டைக் குறைக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மற்றும் ஹரியானாவில் ஸ்கைபஸ்களை தொடங்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் மீண்டும் பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தூரில் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.. அப்போது உரையாற்றிய அவர் “ மின்சார பேருந்துகளில் டீசலை விட 30 சதவீதம் குறைவாக கட்டணம் இருக்கும். மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் விலை உயர்ந்த டீசலில் இயங்குவதால், அது ஒருபோதும் லாபம் அடையாது.. டீசலை விட குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளில் டிக்கெட் விலை 30 சதவீதம் வரை குறைக்க முடியும்…
நாட்டில் 50,000 மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் போக்குவரத்து முறையை நீண்டகால நோக்கில் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது…
“ஆனால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதற்கு பழகவில்லை.. அரசியல்வாதிகள் 50 வருடங்கள் முன்னோக்கி யோசிக்க வேண்டும், அரசு அதிகாரிகள் பேட்ச் ஒர்க் மட்டுமே செய்கிறார்கள் (எந்த பிரச்சனையையும் தற்காலிகமாக தீர்க்க). வரும் நாட்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று தெரிந்ததால் இன்றைய வேலையைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்..