பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் இருக்கும் சப்ராவில் பனன்பூர் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் குடித்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த சாராயத்தை குடித்த பலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் குழு பனன்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இது பற்றி விசாரணை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பவர்களை பிடிக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீனா கூறியுள்ளார். சரண் சரக எஸ்.பி சந்தோஷ் குமார் கூறுகையில், “ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று நாக பஞ்சமி கொண்டாட்டத்தின் போது, கிராமத்தில் சிலர் மது குடித்தனர்.
மேலும், மர்ஹவுரா மற்றும் சோன்பூர் டி.எஸ்.பிகள் கிராமத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூறு ஆய்வு அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார். ஏப்ரல் 2016 முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போதிலும், இந்த வருடத்தில் மட்டும் பீகாரில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் இதுவாகும்.