வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக, சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் தான். தேசியக் கொடியில் உள்ள தம்மச் சக்கரமான அசோக சக்கரம் கூடாது என்பதும் காவியைத் தேசியக் கொடியாக்க வேண்டும் என்பதுமே அவர்தம் நோக்கம்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.