தமிழக நிதியமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு வறுமை, மது, போதை, சூது போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை என்றார். நாளை சுதந்திர தினத்தில் பல அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என்றும், அதில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வரச் செயல்திட்டம், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை, போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை கொண்டு வந்த பிறகு ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தடை நீக்கிய பிறகு ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறை நினைத்தால் போதைப் பொருட்களைத் தடுக்கலாம். விற்பவர்கள் யார் என காவல்துறைக்குத் தெரியும். போதைப் பொருட்களை விற்பவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். போதைப் பொருட்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா? இதை விட கேவலம் எதுவுமில்லை, இது வெட்கக்கேடு என்று குற்றம்சாட்டினார்.