விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து அமைப்புகள் நன்கொடை வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், சிலைகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணமாகி விடுகிறது.
சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து அமைப்புகள் நன்கொடை வசூலிக்கிறது. இதை கண்காணிக்க வேண்டும். அதனால், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும். இதுகுறித்து இந்து அமைப்புகளை அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நன்கொடை வசூலிப்பவர்கள் யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்து அமைப்புகள் என மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அமைப்புகளை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.