சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றுள்ள நிலையில், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிற்க இந்தியா ஏன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதில் அப்படி என்ன தொழிற்நுட்பம் இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சீனா கடந்த 1980ஆம் ஆண்டு யுவான் வாங் என்ற உளவுபார்க்கும் கப்பலை உருவாக்கியது. அது முதல் தலைமுறை கப்பல் என அழைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு 2-வது தலைமுறை உளவு கப்பலை உருவாக்கியது. தற்போது 3-வது தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங்-5 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்தான் தற்போது இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். இந்த கப்பலானது 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் உடையது.
இந்த யுவான் வாங் உளவு கப்பல் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை துறைமுகத்தில் இருந்து 750 கிலோ மீட்டர் வரை உளவு பார்க்க முடியும். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வரை உள்ள நிலபரப்புகளை முழுமையாக உளவு பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த உளவு கப்பல் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அனுமின் நிலையம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம் போன்றவை முழுமையாக உளவு பார்க்க முடியும். இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
இந்த உளவு கப்பலை கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் தன் வசம் வைத்துள்ளது சீனா. இதேபோன்று 7 உளவு கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. இதேபோன்று உளவு கப்பல் நம் நாட்டில் உள்ளது. இந்த உளவு கப்பலில் இருந்து எதிரி நாட்டின் முக்கிய இடங்களை உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை கொண்டு குறி வைத்து தாக்க முடியும். சீனாவானது இந்த யுவான் வாங் உளவு கப்பல் மூலம் எதிரி நாடுகளின் ராணுவ தளவாடங்களை குறித்த தகவல்களை சேகரிக்கும். அந்த இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவான பாதை எவை போன்ற சர்வேக்களை எடுக்க பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து முதலில் அக்கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்தது. பின்னர், சீனாவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.