அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை 3 காவல் அதிகாரிகள் சேர்ந்து காட்டுத்தணமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பலமுறை குத்தி, அவரை தரையில் மண்டியிடச் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தங்களை ஒருவர் படம்பிடிப்பதை பார்த்த ஒரு காவல் அதிகாரி வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு சைகை காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தை படம்பிடித்தவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ வைரலாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய 3 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான நபர் மல்பெரியில் உள்ள கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஊழியருக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது ஒரு போலீஸ்காரரை தரையில் தள்ளி, அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.